கண்டபடி கவலைப்படாதே
இந்த நாட்டில் யாரும் ஒருவராவது எந்த வித கவலைகளும் இன்றி கலாதியாக இருப்பார்களா என்று நான் அடிக்கடி யோசித்ததுஉண்டு? யாழ்ப்பாணத்து பழம் சித்தர்களின் சீடர்கள் யாரும் இன்னும் இருக்கிறார்களா தெரியவில்லை.
எங்கள் நாட்டின் கடன் தொல்லை போல தான், கவலைகளுக்கு இப்போது கணக்கு வழக்கு இல்லை. கவலைப்படுவது என்பது ஒரு கலை ஆகிவிட்டது.
எப்போதாவது இருந்துவிட்டு நண்பன் ஒருவனை சந்தித்தால் ஏதாவது ஒரு பிரச்சனையில்தான் தொடங்கும் கதை "டேய் நாடு எங்கடா போகுது?" "இப்பிடி எல்லாம் சனமா?" "வெறுக்குது மச்சான்..." "எப்பதான் இது முடியுமோ" "கேவலம்..." "சைக்..." "என்ன இழவுடா..." "கறுமம்..." இப்படியான வசனங்களுடன்தான் தொடர்கிறது.
நம்மால் எதுவுமே செய்ய முடியாத போது இப்படியாக வெறுமனே கவலைப்பட்டுக்கொண்டு இருப்பது என்பது ஒரு விதமான சுய சொறிதல் போலத்தான் எனக்கு படுகிறது, ஒரு தற்காலிகமான தீர்வு அவ்வளவுதான்.
இப்படியாக நிறைந்து கிடக்கும் , நம் கவலைகளை ஆராய்ச்சி செய்யும் முயற்சிதான் இது.
வீடு குடும்பம் குட்டி தொடர்பான தனிப்பட்ட கவலைகள் முடிவே இல்லாதவை புதிதாக ஒன்று முளைத்து கொண்டே இருக்கும். அது மூளைக்குள் ஒரு ஓரமாக தொடர்ந்து குடைந்து கொண்டே இருக்கும், ஆகவே அதை விட்டு விட்டு இதர கவலைகளை பார்ப்போம்.
கொரொனா பற்றி யாரும் இப்போது கவலைப்படுகிறமாதிரி தெரியவில்லை. (இது ஒரு நடுத்தர வர்க்க மனநிலை) கொரோனா குறைந்தால், அய்யோ! சம்பளம் வர வேலைக்கு போகவேண்டுமே என்று கவலைப்படும் வர்க்கம் தான் அதிகம் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எப்பயடா பள்ளிக்கூடம் திறப்பார்கள் என்று நிறையப் பேருக்கு கவலை, பிள்ளைகளை துரத்தி விட. கொரொனாவ விட சனம் இந்த ஊசிக்குத்தான் சரியா கவலைப்படுதுகள். லண்டனில் அஸ்ட்ரா சனிக்கா, கனடா சுவிஸ் எல்லாம் பைசர் மற்றும் மொடோனா, எனக்கு மட்டும் சீனபாமோ? என்றுதான். உடம்பில் இருக்குற வருத்தங்களுக்கு ஒவ்வொரு நாளும் சனம் குடிக்கிற குழிசைகள் எல்லாம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இல் இருந்து தான் வருகிறது அது தெரியாது சனத்துக்கு. (மேலைத்தேய மருந்து கம்பெனிகளின் மருந்துகள் வராமவிட்டு இப்ப வருசக்கணக்கு.
விடிஞ்சா, நிம்மதியா ஒரு தேத்தண்ணி குடிக்க ஏலாத நாடா இது? அங்கர் பால்மா குடித்து அடிமையானவர்களின் கவலை. பசுப்பால் குடித்தால் சளி வைக்கும் எண்டு வேற கவலை . அடேய், அரிசி கூட இறக்குமதி செய்தா சாப்பிடுவது? என்று கவலை. இரசாயன பசளை பாவித்தால் புற்றுநோய, சிறுநீரகக் கோளாறு வருகிறது என்று கவலைப்படடால், அதை தடை செய்த பிறகு மரக்கறியே வராதாம் என்று கவலை. பார்ம் கோழிக்கு மாஸ் போடுகிறார்கள், ஊர்க்கோழி தான் organic முட்டை என்றால், அது பல்லி முட்டை அளவுக்குத்தானே இருக்கிறது என்று கவலை. சரி எதையாவது சமைச்சு சாப்பிடுவம் எண்டால் எரி வாயு இல்லை.
ஒரு உயிரினதிதிற்கு சாப்பிடுவதற்கு இத்தனை கவலைகள் இருக்கலாமா, பேசாமல் ஒரு பன்றியாக பிறந்திருககலாம்.
சரி, வீட்டில்தான் இத்தனை கவலைகள் என்று வேலைக்கு போனால், அரசியல் செய்யும் நிர்வாகம், ஒரு குழுவாக சேர்ந்து கொட்டம் அடிக்கும் பலர், ஏன்தான் இவன் வேலைக்கு வருகிறார்களோ என சிந்திக்க வைக்கும் சிலர், அலைக்கழிக்கபடும் மக்கள், என்னதான் செய்வது?
நாட்டின் நிலைமையோ அதி பயங்கம். அப்பன் தொடக்கம் பேரப்பிள்ளை வரை அரசியல் செய்கிறார்களாம். அரசியலா செய்கிறார்கள் நாட்டை கொள்ளை அல்லவா அடிக்கிறார்கள். உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், சீனா என்று கடன் வாங்கி கடைசியாக பங்களாதேஷ் இடமும் கடன் வாங்கி, பாதியை நாட்டாமைகள் பங்கு போட்டு விட வேண்டியது, பின்னர் கடதாசிகளை எல்லாம் காசாக அடித்து விட காசின் பெறுமதி கடதாசியை விட குறைந்து விட்டது. கஷ்டப்பட்டு மிச்சம் பிடித்து நிலையான வைப்புகளில் முதலிட்ட பணத்தின் நிலைமை? நம்மால் பிட்கொயின்தான் வாங்கமுடியாவிட்டாலும் கொஞ்சம் டொட்ஜ்கொயினாவது வாங்கி போட்டிருக்கலாம்!
கொரோனாவின் கோர தாண்டவதிற்குள்ளும் நவீன உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. உலகின் பணக்கார நாடுகளுக்கு காலநிலைமாற்றம், காபன்டைஒக்சைட்டை பற்றி தான் கவலையாம்! மின் கார்கள் தயாரிப்பில் Elon musk இன் TESLA வை துரத்தியபடி கார் கம்பனிகள் போட்டி போட்டு கொண்டு இறங்கிவிட்டிருக்கின்றன. உலகிலேயே அதிவிரைவான மற்றும் அதிக milage உடைய மின்கார் என Tesla Model S plaid வெளியாகி பட்டையை கிளப்பிய சில நாட்களிலேயே Lucid Air இன் Dream edition கார் அதை விட அதிக mileage உடன் Tesla வுக்கு போட்டியாக வெளிவந்திருக்கிறது. இதைவிட யார் முதலில் electric Truck ஐ சந்தைக்கு கொண்டு வருவது என்று போட்டி வேறு, Tesla cyber truck, GMC Hummer EV, Ford F150 lightening என வரிசைக்கு வர இருக்கின்றன மின் ட்ரக்குகள். இவற்றை எல்லாம் கனவுகண்டபடியே எங்கள் ஊரில் ஆட்டோவின் விலையை கேடடு விட்டு கொட்டாவி விட வேண்டியதுதான். நாடு இருக்கும் நிலைமைக்கு உனக்கு கார்க்கனவு என நீங்கள் கேட்பது நியாயம் தான், ஆனாலும் SpaceX இன் Inspiration4 விண்வெளி பயணத்தில் நான்கு சாதாரண மனிதர்கள், Falcon 9 ராக்கெட்டில் விண்வெளிக்குச்சென்று, Crew Dragon Resilience விண்கலத்தில் 3 முறை புவியை சுற்றி விட்டு வந்திருக்கிறார்கள். நான் சொந்தமாக ஒரு காரில் சுற்றுலா செல்ல கவலைப்பட கூடாதா?
இப்படி எல்லாம் கவலைகள் நீண்டு கொண்டே செல்ல,எப்படி நாட்டை விட்டு ஓடித்தப்புவது என்றுதான் பலரது கவலையாக இருக்கிறது.
உங்களுக்கு கூட இந்த கவலைப்பட்டியலின் 50 வீதமான கவலைகள் இருக்கலாம், இதைவிட அதிகமான கவலைகளும் இருக்கலாம். இந்த கட்டுரையில் பின்பகுதியில் நான் குறிப்பிட்டவை எல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட என் கவலைகள், உங்களுக்கு புரிந்ததோ தெரியவில்லை, எனது கவலைகளை நானே கிண்டல் பண்ணும் ஒரு வித முயற்சிதான் இது. முப்பது வயது தாண்டிய பின்னர் அடைந்த முதிர்ச்சியில் யான் உணர்ந்து கொண்ட ஒன்று சில விடயங்களுக்கு கவலைப்படுவது முட்டாள்தனம் என்பதுதான்.
கவலை என்பது எமது எதிர்மறையான எண்ணங்களின் விளைவு, எமது சிந்தனையில் உருவாகும் எண்ணங்களை செயல்படுத்தமுடியாது போகும்போது அல்லது நாம் எண்ணியபடி எவையும் நடக்கவில்லை எனும்போது, நாம் கவலையாக உணர்கிறோம், தொடர்ச்சியான கவலைகளின் தாக்கம் மனதில் தொடங்கி பின்னர் எமது உடற்தொழிற்பாட்டையும் பாதிக்கின்றது. மன அழுத்தம், இரத்த அழுத்தம் என்று எங்களை நோயாளி ஆக்கி விடுகிறது. எமது தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் கொடுக்கும் கவலைகள் சிக்கலானவைதான் என்றாலும் அவற்றுக்கு நிச்சயமாக ஒரு மாற்று வழி இருக்கும், அப்படி இல்லா விட்டாலும் இவற்றுக்காக கவலைப்படுவது நியாயம்தான், கவலைப்பட்டே தான் ஆகவேண்டும் . ஆனால் நாம் ரொம்பவும் அலட்டி கொள்வது எங்களால் புடுங்கவே முடியாத ஆணிகள் பற்றி தான். அவர் இப்படி இவர் அப்படி இவர்களை திருத்தவே முடியாது, பூச்சியத்தில் இருக்கும் தேசியம், நாடு எங்க போகுது, ஊர்த்தெரு, கோயில் குளம் குட்டைகள்.... ப்லா ப்லா ப்லா.
இப்படி எல்லாம் எங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு கவலைப்படுவதுதான் பெரும் பிரச்சனை, இன்றைய காலத்தில் யாரையும் யாராலும் மாற்றமுடியாது அப்படி நினைப்பதே வீண் என்று புரிந்தாலே போதும் பாதி தலைவலி போய்விடும். மாற்றங்கள் என்பது தலைவிதி, தானாக நிகழ்ந்தால் தான் உண்டு. அதற்கு பெரிதாக ஏதாவது பிரளயம் நிகழ்ந்தால் தான் உண்டு. இந்த அண்டப் பெருவெளியில், அங்கும் இங்குமாக திரிந்த விண்கற்கள், தூசிகள், வாயுக்களை எல்லாம் ஒரு ஒழுங்குக்கு கொண்டுவர ஒரு பெரு வெடிப்பும், அதன் மூலம் உருவான சூரியனின் ஈர்ப்பு சக்தியும் தேவைப்பட்டது. எல்லாமே ஒரு ஒழுங்குக்கு வந்தன, பூமி உருவானது நாம் தோன்றினோம். ஆக மாற்றம் ஒன்று நிகழ பெரும் சக்தி தேவை, எப்போதாவது அரிதாகத்தான் அப்படியான சக்தி வாய்ந்த மனிதர்கள் தோன்றுகிறார்கள். ஆனால் அழிப்பதற்கு மட்டும் மனிதர்கள் விண்கற்கள் போல அடிக்கடி தோன்றி கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள்.
நீங்கள் ஒன்றும் சக்திமானோ, சூப்பர் மார்கோ இல்லை எனில் ஊர் உலகத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு விடுங்கள். எங்கள் கவலைகளுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். இப்போதெல்லாம் வீட்டைத் தாண்டி கவலைப்படுவது என்பது வீண் என்றுதான் எனக்கு படுகின்றது.
இன்னொன்று, நீங்கள் அடுத்தவரை கவலைப்படுத்தாமல் இருப்பதே பெரிய விடயம்.
எங்களால் யாராவது ஒருவர் கவலையை போக்க முடியுமானால் அதுதான் புண்ணியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக