பயணங்கள் : கொழும்பு - யாழ்ப்பாணம் #Breakdown stories
பரந்தன் சந்தியில் திரும்பி பூநகரி சங்குப்பிட்டி வீதியில் கார் சென்று கொண்டிருந்தது. சாதாரணமாக நான் இந்த வீதியில் யாழ் செல்லுவதில்லை, யாழ் நோக்கி செல்லும் பக்கம் மட்டும் பாதை பல இடங்களில் பயங்கரமாக உடைந்து விட்டது. அநேகமாக நான் பரந்தன் வந்து சேரும்போது இருட்டி விடுவதால் ஆனையிறவு ஊடாகச் சென்று விடுவேன். கொரோனா முடக்கம் என்பதால் வாகன நெரிசலும் இருக்காது. இந்த முறை கொழும்பிலிருந்து வேளைக்கே வெளிக்கிட்டு இருந்ததால் மதியம் இரண்டு மணிக்கு எல்லாம் கிளிநொச்சியை அடைந்து இருந்தேன். எந்த பாதையில் செல்வது ஆனையிறவா ? பூநகரியா? என்ற பட்டிமன்றத்தை மனதிற்குள் ஓரமாக வைத்துவிட்டு காருடன் சேர்ந்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த வித்தியாசாகரின் பாடல்களை ரசித்தபடி பரந்தன் சந்தியை அடைந்த போது பூநகரி வீதியில் கார் தானாக திரும்பி இருந்தது. சரி, பகல் தானே பள்ளங்களை பார்த்து ஓடலாம் என்று Autopilot இல் வண்டியை ஓடவிட்டுவிட்டு பாட்டு கேட்டுக்கொண்டிருந்த என் மூளை தனக்கு தானே சொல்லிக்கொண்டது. அத்துடன் பசி வேறா, அதனால் மெதுவாகத்தான் போய்க் கொண்டிருந்தேன். நீ காற்று நான் மரம், பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, மலரே மௌனமா, நூறாண்டுக்கு ஒரு முறை என்று தேர்ந்தெடுத்த வித்தியாசாகரின் பாடல்கள் தான் பசியை தீர்த்து கொண்டிருந்ததன. பூநகரி பாதையில் திரும்பிய உடனேயே இரண்டு மூன்று டிப்பர்களை கவனமாக தாண்டி சென்றேன், எமனின் வாகனங்கள் அல்லவா டிப்பர்கள். அதில் ஒரு டிப்பர் போட்டிருந்த வேசம் என் கவனத்தை கொஞ்சம் ஈர்த்தது. அந்த மணல் ஏற்றும் டிப்பருக்கு Vanni queen என்று பேர், முன்னும் பின்னும் வண்ணம் வண்ணமாக நிறைய வடிவமைப்பு செய்திருந்தார்கள், Don't touch me என்று வேறு! சாவு முன்னால் கவனம் என்று எழுதி இருக்கலாம். அட டிப்பருக்கு கூடவா இத்தனை சோடனைகள் என்று ஓடிய எண்ணங்களை தவிர்த்து விட்டு வீதியில் கவனத்தை செலுத்தினால்! கிடங்கு... ஒரு பெரிய கிடங்கு நேர் முன்னால்! முதல் கிடங்கு! ஒரு 80km/h வேகத்தில் சென்று கொண்டிருந்த எனது மூளைக்கு மூன்று தெரிவுகள் இருந்தன. ஒன்று குத்தி நிறுத்து!, இரண்டு சட் என்று வெட்டி கிடங்கை விலத்தி எடு, மூன்று அப்படியே கிடங்குக்கு மேலாக விடு.மனித மூளை எப்பொழுதும் கடந்த கால பதிவுகளையும் சட்டென்று ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்கும். நீ பல தடவை இப்படி கிடங்குகளில் காரை விட்டிருக்கிறாய் ஒன்றும் ஆகாது நேரே விடு என்றது என் பெரு மூளை.
"தடக்... தடாக்...தடாங்..."
"அப்பாடா!" .. கிடங்கை தாண்டி விட்டேன் என எண்ணுவதற்குள்... டங் டங்... டங் டங்...டங் டங்... என்று காரின் முன் சில்லிலிருந்து தொடர்ந்து கேட்ட சத்தம் என் மூளைக்குள் சங்கு ஊதியது. காரை நிறுத்தி விட்டு இறங்கி பார்த்தால் 22000 ரூபாவுக்கு வாங்கி புதிதாக போட்ட டன்லப் டயரில் இருந்த காற்று, காத்தோடு காத்தாக... காணாமல் போய்விட்டிருந்தது. மீண்டும் ஏறி காரினுள் அமர்ந்தேன் வித்தியசாகர் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
நீ காற்று..... நான் ...🎶🎵🎶🎵🎶🎵🎶🎶
பிறந்ததிலிருந்து நாங்கள் பயணித்துகொண்டே இருக்கிறோம், ஆனால் சில பயணங்கள் மட்டும் அப்படியே பசுமரத்தாணியாக மனதில் பதிந்து விடுகிறது. என் பயணங்களை பட்டியலிட்டால் எல்லோரையும் போல் இடப்பெயர்வுகள்தான் முதலிடம் பிடித்திருக்கும். ஒவ்வொரு இடப்பெயர்வும் ஒவ்வொரு கதை. அவற்றை விட்டுவிட்டால் சிறுவயதில் தட்டிவானில் செல்வச்சந்நிதி கோவிலுக்கு போனது இன்னமும் நினைவில் உள்ளது ஏனென்றால், கோவில் கேணியில் தான் முதன் முதலில் ஒரு பிரேதத்தை பார்த்தேன், பார்த்த சாமி ஞாபகம் இல்லை. அந்த போர்க்கால பயணங்கள் பற்றி நினைத்துப் பார்க்கவே கூடாது, பல முறை கூட வந்தவர்கள் இப்போது இல்லை. அப்பாவுடன் குடும்பமாக சைக்கிளில் சென்ற இரண்டு முன்று பயணங்கள் இன்னமும் நினைவில் இருக்கிறது, அப்பாவுடன் எத்தனை முறை பயணம் செய்தேன் என் எண்ணிப்பார்க்க வேண்டி இருப்பதுதான் பெரிய கொடுமை. இப்படியே காலத்தில் பின்னோக்கி போனால் என் மூளை சிக்கிப் போன Audio cassette போல ஆகிவிடுகிறது அதனால் நிகழ்காலத்திற்கே வந்து விடுகிறேன். இப்படியான கடந்த கால பயணங்களுடன் ஒப்பிடும்போது, இன்றைய யாழ் கொழும்பு பயணங்கள் எல்லாம் அன்றோடு முடிந்து விடுகிறது, சுவாரஸ்யமே இல்லை. இப்படி ஏதாவது சரியான சம்பவங்கள் ஏதாவது நிகழாவிடில்.
என் காருக்குத்தான் ஏதோ கண்டம், எனக்கு இல்லை. ஏனெனில் அன்று காற்று போனபோது, பூநகரி வீதியில் இருந்து கிளிநொச்சியில் இருந்த நண்பன் ஒருவனைத்த்தான் உதவிக்கு அழைத்தேன். அவன் அப்பொழுது தான் யாழ் செல்லுவதற்கு தயாராகி கொண்டிருந்தான், உடனே வந்து விட்டான். இரண்டுபேரும் அடுத்த நாள் எமது நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அதற்குத்தான் நானும் வந்தேன். உதவி உடனே வந்து விட்டாலும் உபத்திரவம் தீரவில்லை நாட்டில் டயர் கட்டுப்பாடு, கிளிநொச்சியில் டயர் இல்லை, என்ன செய்வது என்று யோசித்த எங்கள் mechanic ஒரு மொக்கு வேலை செய்தான். Tube less டயருக்குள் ஒரு பழைய டியூப்பை வைத்து காற்றடித்து ஓடுங்கள் என்று பூட்டிவிட்டான். அந்த பழைய டியூப்பிற்கு 2000 ரூபாய் வேறு, நாங்களும் சரி வீடு போய் சேர்ந்தால் போதும் என்று வெளிக்கிட்டு விட்டோம். நான் இந்த பூநகரி பாதை போதும் என்று திருப்பி A9 வீதியில் காரை செலுத்தினேன். ஆனையிறவை அடைந்த போது டியூப் காற்றை விட்டு விட, புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....
பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து டயர் எடுத்து வந்து மாற்றி வீடு போய்ச்சேர இரவு 8மணி.
போனவருடம் முதல் கொரோனா முடக்கத்தின் போது எத்தனை தடவைகள் யாழ்ப்பாணம் போய்வந்திருக்கிறேன், டயர் கம்பி தெரியும் வரை தேய்ந்து போகுமளவுக்கு கார் ஓடியிருக்கிறது, ஒரு நாள் இரவு வேலை முடிந்து புறப்பட்டு ஐந்தரை மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்திற்கு பறந்து போய் அதே நாள் திரும்பி வந்தேன், அது ஒரு சாகசப் பயணம், எதுவுமே ஆகவில்லை. அதன் பின்பு தான் காரின் நான்கு டயர்களையும் மாற்றினேன். தெருக்கள் போல அல்ல வாழ்க்கை, திருப்பங்கள் தெரிவதில்லை.
எனது காருக்கு ஏதோ கண்டம் என்று சொல்லி இருந்தேன் அல்லவா, போனதடவை யாழ்ப்பாணம் போய் திரும்பும் போதும் கூட நடு ராத்திரியில் குருணாகலுக்கு அண்மையில் டயர் காற்று போய்விட்டது. ஒரு பெரிய கம்பி டயரை பஞ்சர் செய்திருந்தது. நாடு வேறு முடக்கம் ஒரு டயர் கடை கூட திறந்திருக்கவில்லை. நல்ல வேளையாக காரில் நான்கு பேர் இருந்தபடியால் தள்ளிக்கொண்டாவது போய்விடலாம் என்ற நிலையில், காரில் இருந்த air compressor and chemical ஐ பயன்படுத்தி காற்றை அடித்து அடித்து நீர் கொழும்பு வரை சென்று அங்கிருந்த டயர் கடையில் பஞ்சர் போட்டு கொழும்பு போய் சேர்ந்தேன், அது பின்பக்க டயர்.
இநத தடவை முன் டயர், இப்போது நாடு இருக்கும் நிலையில் காரின் பெறுமதி தாறுமாறாக ஏறி இருக்கிறது, கார் பழுதடைந்தால் பொதுப் போக்குவரத்து வேறு இல்லை என்று, டயரை மாற்றியதும் காரை நன்றாக Service செய்து சில பல ஒட்டு உடைசல் வேலைகளையும் பார்த்து பத்திரமாக திரும்பி கொழும்பு வந்துகொண்டிருந்தேன் நீர் கொழும்புக்கு அண்மையில் ஏதோ வாகன நெரிசல் காரை நிறுத்தி என்ன ஏது என்று பார்ப்பதற்குள், "படார்" என்று பின்னால் ஒரு சத்தம், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த முட்டாள் காரில் மோதி விழுந்து எழுந்து மீண்டும் வேகமாக சென்று முன்னால் நின்று காருடன் மொத்தப்பார்த்து வெட்டி விலத்தி ஓடியது. என்னடா கறுமம் இது இறங்கி பார்த்தால் காரின் பின்புறத்தில் ஒரு கால்பந்து அளவுக்கு உள்ளே சென்றிருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக